பக்கம் எண் :

382நாமக்கல் கவிஞர் பாடல்கள்

X. காந்தியடிகள் பெருமை

237. காந்திஅஞ்சலி

சமன்இ லாத இந்த நாட்டின்
       ஞான வாழ்வின் சக்தியைச்
சரிச மான மாக மற்ற
       உயிரை என்னும் சாந்தியை
அமர னாகி நம்மைக் காக்கும்
       அண்ணல் காந்தி ஐயனை
அஞ்ச லிக்கும் யாவருக்கும்
       சஞ்ச லங்கள் தீருமே.

238.மகாத்மா

இத்தனைநாள் உலகமெல்லாம் இருந்து அறிந்த
       பெரியவர்கள் இசைத்த ஞானம்
அத்தனையும் ஓர்உருவாய்த் திரண்டது எனக்
       கலியுகத்தே அவத ரித்தோன்
சத்தியமே மந்திரமாம் சாந்தம் ஒன்றே
       தந்திரமாம் சமயம் தந்த
உத்தமனாம் காந்திமுனி உச்சரித்த
       சாத்வீகத்தை உறுதி கொள்வோம்.

239.கண்கண்ட தெய்வம்

காந்திக்கு நிகர்வேறுஉண்டோ - மக்கள்
       கண்கண்ட ஒருதெய்வம் அன்றோ?
சாந்திக்கும் புகழ்தந்த சாந்தன் - உலகில்
       சன்மார்க்க வாழ்க்கைக்கு வேந்தன்.       1

மரணத்தைஇனிதாக்கும் ஐயன் - என்றும்
       மனதுள்ளும் சினமற்ற மெய்யன்
இரணத்தை எய்யாத வீரன் - காந்தி
       இணையற்ற மெய்ஞ்ஞான தீரன்.       2