பக்கம் எண் :

66நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சொன்னவர்கள் சூழ்ச்சிகளைச் செய்தா ரன்றிச்
       சொந்தபுத்தி இல்லாத வீணர் என்றும்
பொன்னாலும் புகழாலும் மயக்க வொண்ணாப்
       புலவர்களின் இலக்கியங்கள் பொய்க ளென்றும்
என்னேரம் பார்த்தாலும் இகழ்வே யானால்
       எப்படிநம் தமிழ்மொழிக்கு வளர்ச்சி ஏறும்?       5

ஏனென்று கேட்பதற்கோ எவரும் இன்றி
       எழில்மிகுந்த தமிழ்வாழ்வை இகழ்ந்து பேசிக்
கோனென்ற யாவரினும் குணமே மிக்க
       மூவேந்தர் நெறிமுறைக்கும் குற்றம் கூறும்
நானென்ற அகங்காரம் நம்மைச் சூழ
       நல்லதமிழ் வளர்ச்சியினி நமக்கும் உண்டோ?
தேனென்ற நமது மொழி வாழவேண்டின்
       தீவிரமாய் இந்நிலையைத் தீர்க்க வேண்டும்.       6

நித்தியமாம் சத்தியமே நெறியாய்க் கொண்டு
       நெற்றிக்கண் ஈசனுக்கும் குற்றம் காட்டும்
சுத்தமுள்ள பெரும்புலவர் வழியில் தோன்றிச்
       சுகபோக ஆசைகளைத் துறந்து வாழ்ந்த
எத்தனையோ பெரியவர்கள் இசைத்த நூல்கள்
       ஏளனத்தால் இழிவடைய விட்டோம் இந்நாள்
அத்தனையும் அழித்தொழிய விடுவோ மானால்
       அதன்பிறகு தமிழ்வளர்ச்சி ஆசை என்னாம்?       7

புதுமையென்றும் புரட்சியென்றும் புனைந்து கூறிப்
       புவியறிந்த உண்மைகளைப் பொருள்செய் யாமல்
முதுமொழிகள் யாவையுமே மோசம் செய்யும்
       மூடபக்தி யாகுமென முரண்டு சொல்லிச்
சதிபுரியத் துணிந்து விட்டோம்; தமிழ்த்தாய் நொந்து
       தவிக்கின்றான்; தான்வளர்த்த தருமம் எல்லாம்
கதியிழந்து போகுமெனக் கண்ணீர் கொட்டிக்
       கதறுகின்றாள் அவள்பெருமை காப்போம் வாரீர்!       8