பக்கம் எண் :

சுவடியின் மரபு தெரிவுறு காதைபக்கம் : 105

தங்கத் தேவனிடம் ஏமகானன் முறையிடல்

 

 

மின்பொறித் தாக்குதல் மெய்யுற் றான்போல்
பின்புறம் நோக்கிலன் பேசா நாவினன்
 
  ஏகினன் வடபுல ஏம கானன்; 130
  போகிய அவ்விசைப் புலவன் தானுறை
தங்கத் தேவன் தன்மனை குறுகிச்
`சிங்கம் என்னையிச் சிறியோன் பழித்தனன்;
என்னிசை இகழ்ந்து தன்னிசை புகழ்ந்தனன்
 
  நின்னுரை கேட்டேன் நெளிந்ததென் மானம்! 135
  எந்நகர்ச் செலினும் எற்பணிந் தேற்றனர்;
இந்நகர் ஒன்றே இகழ்வுரை தந்தது;
தங்கத் தேவ! தலைகவிழ் நிலையில்
தொங்கச் செய்தனை! துளைத்தனை நெஞ்சம்'
 
  செங்கண் சிவக்கச் செப்பினன் இவ்வணம்; 140
     
 

தங்கத் தேவன் கொதிப்புரை

 
     
  `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி!
வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில்
இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை
அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல்
 
  விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்; 145
  மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச்
செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்;
கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி
மேவினன் போலும், மிடுக்கினைத் தொலைப்போம்;
 
  தேவ பாடையின் சிறப்பினை நாட்டுவோம்; 150
  யாவரும் என்பெயர் கேட்டால் நடுங்குவர்,
பிறப்பால் இழிந்தோன் எதிர்த்துனைப் பேசினன்!
இறப்பே அவன்இனி எய்துதல் வேண்டும்'என்
றழுக்கா றுள்ளம் அயலவன் சினமும்
 
  இழுக்குறு செயல்செய எழுந்தன; ஒருநாள் 155

---------------------------------------------------------------

  குறுமகன் - சிறியவன், தேவபாடை - ஆரியமொழி.