|  | கவிஞரைப் பற்றி |  | 
                  |  |  |  | 
                  |  | 7-10-1920 தமிழ் நெஞ்சங்களில் நிலை பெற்றுவிட்ட நாள். ஏனெனில், அதுதான் கவியரசு           முடியரசனார், சுப்பராயலு - சீதாலெட்சுமி என்பார்க்கு மகனாகப் பிறந்த நல்ல நாள்.           "பிறப்பினாலேயே பெருமை வந்து விடுமா?" என்று சிலர் வினவுவர். வாழ்வின் சிறப்பினால்           பெருமை வளர்கின்ற பொழுது அது பிறப்பையும் பெருமைப்படுத்தி விடுவது உண்மைதானே |  | 
                  |  | பெரியகுளம்... மதுரை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் நகரம் மட்டுமன்று. இருபதாம்           நூற்றாண்டின் இலக்கியப் பசியைத் தணிக்கத் தமிழ் விருந்து படைத்த கவியரசு முடியரசனாரை           ஈன்றெடுத்த நகரமும் ஆகும். |  | 
                  |  | உரிய வயதில் தொடக்கக் கல்வி கற்பிக்கப்பட்டது. தாய்மாமன் துரைசாமி பிற்கால           இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இதனால், `இலக்கியச் சாறு' பருகும்           பழக்கம் இளமையிலேயே இவருக்குக் கிட்டிற்று. அது இந்தக் கவிதை மீனுக்குப் பெரியகுளத்தை           நல்ல நீச்சற் குளமாக ஆக்கிற்று. |  | 
                  |  | வளைந்து கிடக்கும் மேற்குமலைத் தொடரும் அதில் மேய்ந்துதிரியும் மேகக் காட்சியும்           - இசைபாடும் புள்ளினமும் இறங்கிவரும் சிற்றாறும் - வெள்ளிக் காசைச் சுண்டிவிட்டாற்           போலத் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களும், வெடித்துச் சிரித்துக் காண்பவர்           விழியைக் கவரும் வாசமலர்க் குலமும் துரைராசுவின் இதயத்தைக் கவர்ந்தன; என்னவோ           செய்தன. தாய்மாமன் துரைசாமி ஊட்டிய இலக்கியச்சாறு தன் வேலையைத் தொடங்கி விட்டது. விளைவு...? இளைஞர் துரைராசு கவிஞர் முடியரசன்           ஆனார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி தமிழறிவைத் தந்து சிறப்பித்தது.           அக்கல்லூரியில் நிகழும் அறிஞர் பெருமக்களின் உரைகள், அப்போது நிகழ்ந்த உரையாடல்கள்           கவிஞரின் உள்ளத்தில் ஆழ்ந்த மொழிப்பற்றையும் இனப்பற்றையும் கிளர்ந்தெழச் செய்தன.
 |  |