பக்கம் எண் :

25

காலை 9 மணி ஆகியும் எழ முடியவில்லை. உடம்பு ஒரு நிலையில்
இல்லை. அசைய முடியவில்லை. நெஞ்சும் வலித்தது. என் உறவினர்
மருத்துவர் திரு.மகாதேவனிடம் போனேன். ‘ECG’ எடுக்கச்
சொன்னார். பார்த்துவிட்டு உடனே மதுரை போகச் சொன்னார்.
இதயநோய் வல்லுநர் திரு. முத்துசாமியைச் சந்தித்தேன். அவர்
சோதனை மேல் சோதனை செய்து இதயத் துடிப்பு சீராக இல்லை,
விட்டுவிட்டு அடிக்கிறது. சர்க்கரை நோயுடன் நரம்புத் தளர்ச்சியும்
இருக்கிறது என்று ஒருவாரம் அவருடைய மருத்துவமனையில் தங்கச்
செய்து மருந்து மாத்திரை கொடுத்தார். கொஞ்சம் குணமானதும்
கோவைக்கு நானும் என் மனைவியும் போனோம். திரு.
சிதம்பரநாதனிடம் வராத விருந்தாளியாக நோய் வந்திருக்கிறது,
உபசரிக்க வேண்டும் என்று சொன்னேன். நானும் அவரும் ஐயாவிடம்
போனோம். நிலைமையைச் சொன்னேன். என்னை விடுதல் செய்ய
வேண்டும் என்று வேண்டினேன். ‘ஊரில் இருந்து பத்திரிகைக்கு
உதவுங்கள் என்ற சொல்லி பெரிய உள்ளத்துடன் வழியனுப்பி
வைத்தார்.

நானும் என் துணைவியாரும் ஊருக்கு வந்தோம். வந்தது முதல்
வைத்தியம்தான். மதுரையில் மூன்று மருத்துவ மனைகளிலும்
கோவையில் கொங்குநாடு மருத்துவ மனையிலும் இருந்து பார்த்தேன்.
கடைசியில் பார்க்கின் சன்’ என்னும் ஒருவகை வாதம் என்று
கண்டுபிடித்தார்கள். சாப்பிடுவது, குளிப்பது கூட முடியவில்லை. என்
மனைவிதான் எல்லாம் செய்ய வேண்டும். மிகவும் உடல் மோசமாகி
விட்டது. படுக்கையில் புரளக் கூட முடியாது. மருத்துவர் ஜே.
ஜெயக்குமார் (நரம்பியல் வல்லுநர்) எழுதிக் கொடுத்த வெளிநாட்டு
மாத்திரைகளை உட்கொண்ட பின் கொஞ்சம் நோய் தணிந்தது.

என்னைப் பார்க்க உள்ளூர் நண்பர்களைக் காட்டிலும் வெளியூர்
நண்பர்கள் அதிகம் வந்தார்கள்.

கவிக்கோ முதல்முறை வந்து ‘வேலூருக்குப் போகலாம்’ என்றார்.
வருகிறேன் என்று சொன்னேன்.