ஆ! பசும்புல்லை மேய்வதனால் என்னை நீங்கள் பசுஎன்பீர்; என்பேரோ கார ணப்பேர்! முசுகுந்தன் முன்னோனாம் மனுவின் மைந்தன் முறைதவறித் தேரோட்டி என்னி னத்தின் சிசுமாய்த்தான்; ஆராய்ச்சி மணிய டித்தேன்; செவியுற்ற சோழன்ஓ டோடி வந்தான்; பசுவாஆ ராய்ச்சிமணி யடித்த தென்று பார்த்தே ‘ஆ’! என வியந்தான், “ஆ” ஆனேன்நான்! பெண்பால் நான்! என்பாலை உண்டே நீங்கள் பெரும்பாலும் உரங்காண்பீர்! நீங்கள் தாய்ப்பால் உண்பதெலாம் ஒருபருவம்; ஆனால் என்பால் உயிர்போகும் வரைபருகி வருவீர்! இந்தப் பண்புணர்ந்தே குறளுக்கு ‘முப்பால்’ என்று பழந்தமிழர் பெயரிட்டார். ஆனால் இன்று பண்பாட்டில் மிகமட்டம் நீங்கள்; கன்று பால், கூடக் குடிப்பதற்கு விடுகின் றீரா? தமிழ்நாடு 14.10.62 |