பக்கம் எண் :

மீரா கவிதைகள்.57

தீந்தேனைச் சிந்துகின்ற
தென்னாட்டுப் பூக்களைஎன்
கூந்தலிலே சிறைவைத்துக்
குதூகலம்தான் அடைந்தேனா?
பிறந்ததுதான் பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

பலாச்சுளைபோல் மின்னும்என்
பாதநடம் பார்த்துமயில்
கலாபத்தை விரித்தாடக்
கற்றுத்தான் கொடுத்தேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

மரக்கிளையில் அமைர்ந்திருக்கும்
மாங்குயில்கள் மயக்கும்என்
குரல்கேட்டுப் பின்கூவக்
குருவாய்நான் ஆனேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

நள்ளிரவு நாடகத்தில்
நகைச்சுவையாய் வந்துதித்த
பிள்ளைக்குப் பாலூட்டும்
பெரும்பேறு பெற்றேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?

‘தமிழ்நாடு’நாளிதழில்
வெளிவந்து
14.10.63