பக்கம் எண் :

மீரா கவிதைகள்.65

தமிழ்வாழத் தமிழ்ப்புலவன் குடும்பம் வாழத்
தலைகொடுக்க முனைந்திட்ட குமண மன்னன்,
தமிழ்வாழத் திடமாக ஒளவை வாழத்
தனிநெல்லிக் கனிதந்த தகடூர் வேந்தன்
தமிழ்வாழக் கலம்பகமும் நிலைத்து வாழத்
தன்னுயிரைக் கொடுத்திட நந்தி போன்றோர்
தமிழ்வாழத் தமிழோடு சேர்ந்து வாழும்
சாகாத நிலைகண்டார்! ஏற்றங் கொண்டார்!

ஒன்றேனும் மனம்பற்றாச் சமணப் பள்ளி
உட்புகுந்தும், துறவிருந்தம், பசுவை நாடும்
கன்றாகத் தமிழ்ப்பற்றுக் கொண்டார் வஞ்சிக்
காவலனின் ஒருதம்பி! இறைவன் தன்னை
நன்றாகத் தமிழ்செய்யப் படைத்தான் என்றார்
நற்சைவத் திருமூலர்! விளக்கி ருக்கும்
குன்றாகத் தமிழ்திகழ வேண்டு மென்றால்
குருதியிலே அவர்உணர்ச்சி பாய வேண்டும்!
உமையாளைச் சிவபெருமான் தன்னு டம்பின்
ஒருபாதி வைத்திட்டான்; கல்வி மாதாய்
அமைந்துள்ள வாணியினை அயன்தன் நாவில்
அமர்த்திக்கொண் டான்என்பர்! தமிழர் நாமும்
இமைதீய்க்கும் கண்ணீரை வழியச் செய்யும்
இடர்என்ன வந்தாலும், அசைந்தி டாத
இமயம்போல் செந்தமிழை இதயம் வைத்தே
இன்றைக்கும் என்றைக்கும் போற்ற வேண்டும்!