பக்கம் எண் :

82.மீரா கவிதைகள்

உயிர்க்கேள்வி?

கொடிதான் ஒருநாள் மலரவில்லை - எனில்
கொஞ்சும் அதனெழில் குலைவதில்லை;
விடியற் சேவல் கூவவில்லை - எனில்
வெங்கதி ரோன்தொழில் விடுவதில்லை;
பிடியை ஒருநாள் காணவில்லை - எனில்
பெருவே ழம்பித் தடைவதில்லை
அடி! ஒரு நாள்உனை நோக்கவில்லை - எனில்
ஆசைக் கனவுகள் மடிவதுமேன்?

வாயொரு நாளே உண்ணவில்லை - எனில்
வாழ்க்கை முடிந்து போவதில்லை;
காயொரு நாளே கனியவில்லை - எனில்
காட்டுக் கிளிகள் சாவதில்லை;
பாயொரு நாளே பக்கமில்லை - எனில்
படுக்கா திருப்பவர் யாருமில்லை;
நீயொரு நாள்எனை நெருங்கவில்லை - எனில்
நெஞ்சில் காரிருள் படிவதுமேன்?