பக்கம் எண் :

84.மீரா கவிதைகள்

கூந்தல் நிழலில்
குடியிருக்க வேண்டுமடி!

காதலித்துப் பொங்குதடி சித்தம் - என்றன்
கண்ணில் ஆசை பொங்குதடி நித்தம் - உயிர்
பேதலித்துப் பிரிந்திடுமுன்
பேசாமல் அளி, இன்ப
முத்தம்! அழி பித்தம்!

தென்றலிலே பனிகண்டேன் முன்னம் - இன்று
தீ கண்டேன் - காரணம் உன் எண்ணம் - நெடுங்
குன்றிழியும் அருவியெனக்
கொதிப்படக்கத் தா, அமுதக்
கன்னம்! என் அன்னம்!

இரவினிலே துயில்உண்டா? இல்லை - அடீ,
ஏன் வளைத்தாய் உன்புருவ வில்லை? - தினம்
பரவிவரும் நோய்தீர்க்கப்
பக்கம்வந்து கொடு, மருந்துச்
சொல்லை! தடு தொல்லை!