120நாமக்கல் கவிஞர் பாடல்கள்

குணம்படைத்துக் கருணைமிகும் கொள்கைக் காகக்
       கோடானு கோடிமக்கள் எங்கும் கூடிக்
‘கணம்பொறுங்கள்! கண்டாலும் போதும்‘ என்று
       களிசிறக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.       2

எச்சிலுண்ணும் சிறுமனத்தார் பலபேர் கூடி
       இல்லாத பெருமைகளை இசைத்துக் கூறும்
இச்சகத்தால் மதிமயங்கி இருமாப் புற்ற
       இருள்மனத்தார் எத்தனையோ அரசர்கண்டோம்;
மெச்சுகின்ற பிறர்மொழியை மிகைசெய் யாமல்
       மெய்யறிவும் பொய்வெறுப்பும் துணையாய் மேவ
அச்சமற்ற நல்லொழுக்கம் அதற்கே மக்கள்
       ஆசைசெய்யும் அரசனெங்கள் ஜவஹர் லாலே.       3

சேனைகளை முன்செலுத்திப் பின்னால் நின்று
       ‘ஜெயித்துவிட்டேன்!‘ என்றுசொல்லிச் செருக்கி வாழும்
ஊனமுள்ள பெருமையினால் அரச ரென்போர்
       உலகத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம்;
தீனர்களின் துயர்துடைக்க முன்னால் நின்று
       தீரமுடன் பிறர்க்குழைக்கும் சிறப்புக் காக
மானமிகும் வீரரென எங்கும் வாழ்த்த
       மன்னனென விளங்கிடுவான் ஜவஹர் லாலே       4

கஞ்சியின்றி உயிர்தளர்ந்த ஏழை மக்கள்
       காலில்வந்து விழுவதையே களிப்பாய் எண்ணிப்
பஞ்சணையில் படுத்திருந்த படியே இந்தப்
       பாரளிக்கும் மன்னவர்கள் பலரைப் பார்த்தோம்;
தஞ்சமின்றித் தரித்திரத்தின் கொடுமை வாட்டத்
       தவித்துழலும் பலகோடி மக்கட் கெல்லாம்
அஞ்சலென்ற மொழிகூறி ஆண்மை யூட்டும்
       அன்புருவாம் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.       5

ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி
       அடிபரவும் பலபேர்கள் அருகே சூழப்