130நாமக்கல் கவிஞர் பாடல்கள்

71. தருணம் இதுவே

பல்லவி

தருணம் இதுவே, தருமம் இதுவே,
தமிழா! எழுந்திரடா.

அநுபல்லவி

கருணையின் வடிவாம் கலைகளின் முடிவாம்
காந்தியென் றொருமுனி ‘சாந்தி‘யென் றழைக்கிறார்.       (தரு)

சரணங்கள்

வள்ளுவர் வாழ்க்கையும் திருக்குறள் வகுத்ததும்
தள்ளருள் தாயுமா னவருடல் தகித்ததும்
வள்ளலி ராமலிங்க சுவாமிகள் வடித்ததும்
கள்ளமில் பட்டினத்தார் கவலையும் இதற்கே.       (தரு)1

சைவர்கள் பூண்டதும் சமணர்கள் மாண்டதும்
வைணவர் வருத்தமும் புத்தர்கள் வாட்டமும்
மையற ஏசுநாதன் சிலுவையில் மரித்ததும்
மஹம்மது நபியவர் மகிழ்ந்ததும் இதற்கே.       (தரு)2

கம்பன் கவித்திறமும் வில்லியின் சந்தமும்
செம்பொருள் சேக்கிழார் தேடத் தெரிந்ததுவும்
பைம்பரஞ் சோதியார் பாடிப் பகர்ந்ததுவும்
நம்பின யாவரும் நவின்றதும் இதுவே.       (தரு)3

மூவர் தேவாரமும் ஒளவைநன் மொழிகளும்
ஆழ்வா ராதியர் அனுபவ உரைகளும்
பால்வரும் திருப்புகழ் ஆதிய பனுவலும்
மேல்வரும் கதிக்கென விளம்பிய திதுவே.       (தரு)4

யாகங்கள் முயன்றதும் யோகங்கள் பயின்றதும்
மோகங்க ளைவிடுத்த முனிவரர் பற்பலர்
சாகங்க ளைப்புசித்துத் தவங்கிடந் துழன்றதும்
ஆகமம் பற்பலவும் அலைந்ததும் இதற்கே.       (தரு)5

குறிப்புரை:- சாகங்களைப்புசித்து - இலையுணவுகொள்ளும்
உயிர்களைப் புசித்து.