162நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அமைதிகள் நிறைந்துள்ள சமுதாயம் நிலவிடும்
அக்கம்பக் கங்களெல்லாம் அன்போடு குலவிடும்.       (சாந்தி)2

குறிப்புரை:-சழக்குகள் - அறியாமையாளர்கள்; சந்தோஷம் - மகிழ்ச்சி.

111. எளியவர்க்குழைத்தவர்

பல்லவி

சுகபோ கங்களின் சூழ்ச்சியில் மயங்கா
சுகிர்தன் காந்தி மகான்!

அநுபல்லவி

இகபோ கங்களைத் துறந்தவர் தமக்குள்
இவர்போல் எளியவர்க் குழைத்தவர் எவரே!       (சுக)

சரணங்கள்

ஏழைகள் குடிசையே இறைவன் கோயில்
என்றவர் தரித்திர நாராயணர் என
வாழியென் றவர்களை வாழ்த்திட வாழ்ந்து
வறுமையின் கொடுமையை வீழ்த்திடச் சூழ்ந்து       (சுக)1

எளியவர் நலமுறச் செல்வரை இகழான்
ஏழைகட் குதவா எவரையும் புகழான்
பழிசெய்து பெறுகிற சுகங்களைப் பழித்தான்.
பக்தியின் வருகிற சக்தியை அளித்தான்       (சுக)2

தீனர்கள் பணியே திருப்பணி என்று
தினந்தினம் அதற்கே மனந்தர நின்ற
வானுயர் காந்தியை வணங்குதல் ஒன்றே
வறுமையின் கொடுமையைப் போக்கிடும் நன்றே!       (சுக)3

குறிப்புரை:-தீனர்கள் - இரப்போர்கள், யாசிப்பவர்கள்.

112. கடமையும் கருணையும்

பல்லவி

கடமையும் கருணையும் இப்படிக் கலங்கிட
காந்தியைப் போலிங்கு வாழ்ந்தவர் யார்?