பொய்யுரை பேசும் புன்மையில் லாதது நடுநிலை விட்ட நலங்களைத் துறக்கும் இம்சையால் வருகிற இன்பம் இகழும் உடலை வளர்க்க ஊறுசெய் யாது. உயிரையும் கொடுத்தே உதவிகள் புரியும். 25 பிறர்குறை பேசிப் பிழைக்க எண்ணாது சிறுமை எதையும் சீறித் தள்ளும் இனிய சொற்களே இயல்பாய்ப் பேசும் பொன்னே வரினும் புறஞ்சொல் லாது கொள்கை விடாமல் கொடுமை சகிக்கும். 30 தன்னலச் செலவில் பிறநலம் தாங்கும் நீதி இல்லாத வழிகளை நீக்கிய வெற்றி விருப்பமே வீரம் என்பது. தீரம் என்பது தெய்வீக வீரம். உலகம் முழுதையும் ஒன்றாய்க் கருதி 35 விருப்பு வெறுப்பு விகாரம் விலக்கிச் சாந்தம் என்பதன் சாரம் சேர்ந்தது. கொல்லா விரதமே கொள்கையாக் கொண்டு கொல்லப் படினும் கொலைபு ரியாத தெளிந்த வீரமே தீரம் என்பதாம். 40 மகாத்து மாக்களே தீர மரபினர் விவேகா னந்தரை வீரம் என்றால் இராம கிருஷ்ணரைத் தீரம் எனலாம்.
|