புலவர் சிவ. கன்னியப்பன் 237

கம்பனை மறந்தால் தமிழ்ஏது?
       கவிதை என்பதும் கமழாது!
அம்புவிக் கவிஞருள் அரசாகும்
       அவனே தமிழ்மொழிப் பரிசாகும்.       4

கற்பனை சிறந்தது கம்பன்சொல்
       கலைத்திறம் நிறைந்தது கம்பன்சொல்
அற்புதச் சித்திரம் அவன்பாட்டு
       அறிவுக் கினிப்பதிங் கவன்பாட்டு       5

சத்தியம் மிளிர்வது கம்பன்சொல்
       சாந்தியைத் தருவது கம்பன்சொல்
நித்தியம் பெற்றதும் அவன்வாக்கு
       நிந்தனை அற்றதும் அவன்வாக்கு.       6

இயல்பாம் வழிகளில் கதைபேசி
       இசைமிகும் மொழிகளில் கவிவீசி
நயமிகும் நாடகம் நடப்பதுபோல்
       நாவலர் வியந்திடத் தொடுப்பவனாம்.       7

கலைமொழி நயங்களைக் காட்டிடவும்
       கல்வியில் தெளிவினை ஊட்டிடவும்
நிலைதரும் ஊற்றெனத் தமிழ்நாட்டில்
       நின்றிடும் கம்பன் அரும்பாட்டு.       8

கன்னித் தமிழெனும் பெருமையெலாம்
       கம்பன் கவிதையின் அருமையினால்
இன்னொரு கம்பனும் வருவானோ?
       இப்படி யும்கவி தருவானோ!       9

துயரம் நேர்ந்திடில் துணையாகும்
       துன்பம் நீந்திடப் புணையாகும்
அயர்வுறும் வேளையில் அலுப்பகற்றும்
       அச்சம் நீங்கிட வலுப்படுத்தும்       10