328நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஆனஉயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்
       ஆகும்என்ற மெய்யுணர்வை அளிக்க வல்ல
ஞானஒளி காணாத மனித வாழ்க்கை
       நரகம்என்று சொல்லுவதே ஞாய மாகும்.       1

மற்றுஎவரும் கண்டறியாச் சன்மார்க் கத்தால்
       மாறுபட்ட அன்னியரின் மனத்தை மாற்றிச்
சுற்றியுள்ள தேசமெல்லாம் வியந்து வாழ்த்தச்
       சுதந்தரத்தை நாமடைந்த சூட்சு மத்தை
உற்றுணர்ந்தால் ‘தெய்வபக்தி‘ ஒன்றால் அன்றோ
       உயர்வுபெற்றோம் என்றமுழு உண்மை காண்போம்
சற்றுஇதனை அனுதினமும் மனத்திற் கொண்டால்
       சமதர்மம் மக்களிடை எங்கும் தங்கும்.       2

திட்டமிட்டே அரசாட்சி செய்திட் டாலும்
       தீவிரமாய்ச் செல்வங்கள் திரண்டிட் டாலும்
கட்டுதிட்டம் காவல்,படை கனத்திட் டாலும்
       ‘கருணை‘ என்ற ஓர்உணர்ச்சி கலக்கா விட்டால்
சுட்டெரிக்கும் தீஉடலிற் பட்டால் என்னச்
       சுதந்தரத்தின் இன்பமெல்லாம் சுருங்கிப் போகும்;
அட்டியென்ன? கருணை அன்புஇங்(கு) என்ப எல்லாம்
       ஆண்டவன்பால் ‘பக்தி‘என்ற அதுதான் நல்கும்.       3

அரும்புகின்ற தெய்வபக்தி அணுவா னாலும்
       அகங்காரம் குறைவதற்கும் அதுவே வித்தாம்;
தரும்பயனாம் அன்பறங்கள் தழைக்கும் என்றே
       தவம்மிகுந்த தமிழ்நாட்டின் நமது முன்னோர்
திரும்புகின்ற பக்கமெல்லாம் தெய்வம் தோன்றத்
       திருக்கோயில் கோபுரங்கள் திகழச் செய்தார்;
பரம்பரையாம் பக்தியைநாம் பாது காத்தால்
       பழுதற்ற சமதர்மம் பரவி வாழ்வோம்.       4