குடிகளைக் கோன்க ளாக்கிக் கோன்களைக் குடிக ளாக்கி மடமையை மதியாய் மாற்றி மதிக்கும் ஓர் புதுமை கூட்டித் திடமுறச் செய்த காந்தி திருக்கதை மறக்க லாமோ? 1மேழியைச் செங்கோ லாக்கிச் செங்கோலை மேழி யாக்கி ஏழையின் துயரம் நீக்கித் துயரத்தை ஏழை யாக்கிக் கோழையை வீர னாக்கி வீரத்தின் கொலைகள் நீக்கும் வாழிய காந்தி நாமம் வையகம் உளவ ரைக்கும். 2 தூய்மையின் துணிவுண் டாக்கித் துணிவினைத் தூய்மை யாக்கி வாய்மையின் வறுமை போக்கி வறுமையும் வாய்மை காக்கத் தீமையைத் தீமை யாலே தீர்த்திட முடியா தென்று தாய்மையே செய்த காந்தி தவம் செய்த தவமாம் அன்றோ? 3 உள்ளத்தைக்கோயி லாக்கி உண்மையைத் தெய்வமாக்கிக் கள்ளத்தைக் கடிந்து நீக்கிக் கருணையின் காட்சிகண்டான் எள்ளொத்த ஆசை யின்றி ‘என்கடன் பணியே‘ என்ற தெள்ளுற்ற தியாகிகாந்தி கண்கண்ட தெய்வ மன்றோ? |