428நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கலகமற்று மனிதர் வாழக்
       காந்தி மார்க்கம் ஒன்றுதான்
உலகினுக்குத் தேவை என்ற
       உண்மை கண்டு கொண்டபின்       (எச்)2

காந்தி போதச் சேவை செய்யக்
       கங்க ணத்தைப் பூண்ட நாம்
தேர்ந்த வாறு பேசிக் கொண்டு
       நிலைகு லைந்து நிற்கிறோம்.       (எச்)3

காந்தி காந்தி காந்தி என்று
       காத டைக்கக் கூவினோம்
காந்தி சொன்ன சாந்தி மட்டும்
       காதில் ஏற வில்லையே!       (எச்)4

சத்தியத்தை வாழ்ந்து காட்டும்
       சாந்த மூர்த்தி காந்தியை
நித்தம் நித்தம் வாழ்த்தி விட்டு
       நெஞ்சில் உண்மை பெற்றிலோம் (எச்)5

கோப மற்ற காந்தி யாரைத்
       தலைவ ராகக் கொண்ட நாம்
தாப மற்ற வார்த்தை பேசத்
       தண்மை கூடப் பெற்றிலோம்.       (எச்)6

பதவி யற்ற சேவை செய்யப்
       பாடம் சொல்லித் தந்தநாம்
பதவி பற்றி உதவி யற்ற
       பலவும் பேசித் திரிகிறோம்.       (எச்)7

பூசை யோடு கோயி லுக்குள்
       பூட்டி வைக்கும் சாமிபோல்
ஓசை யோடு காந்தி பொம்மை
       ஊர்வ லங்கள் செய்கிறோம்.       (எச்)8