496நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தாதாபாயும் ஏ.ஓ.ஹ்யூமும்
       தம்பொடு வெடர்பானும்
மாதா இந்திய நாட்டுக்(கு) உதவிய
       மலையரண் காங்கிரசே.       3

அன்றவர் ஊன்றிய ஆலினும் சிறுவிதை
       அடர்ந்துயர் மரமாகி
இன்றுநம் நாட்டினில் யாவரும் நிழல்பெற
       இலங்கிடும் காங்கிரசே.       4

ஏழை எளியவர்க்(கு) என்றும் உழைப்பதும்
       இந்திய காங்கிரசே
கோழைத் தனமது நம்மைவிட்(டு) ஓடிடக்
       கொடுத்தது காங்கிரசே.       5

நிலவளம் நீர்வளம் சிறந்தது உலகினில்
       நிகர்சொல்ல முடியாத
பலவள நாட்டினில் பஞ்சம் ஏன்எனப்
       பதைப்பது காங்கிரசே.       6

அறநெறி வகைகளும் அரசியல் முறைகளும்
       அன்னியர்(கு) உதவினநாம்
பிறநெறி மயக்கினில் பேதுறல் ஏன்?எனப்
       பேசிடும் காங்கிரசே,       7

வீரரும் தீரரும் விளங்கிய நாட்டினில்
       வீணர்கள் ஆவோமோ!
ஓரமும் வஞ்சமும் ஒழிந்திட எழுந்ததும்
       உழைப்பதும் காங்கிரசே.       8

ஜாதியும் மதங்களும் சமரசம் எய்திடத்
       தரிப்பது காங்கிரசே.
நீதியும் சுகங்களும் யாவரும் அடைந்திட
       நினைப்பது காங்கிரசே.       9