விஞ்ஞானக் கலைகளெல்லாம் விரிந்திட் டாலும் வேறெவர்க்கும் அழிவுசெய்ய விரும்பி டாத மெய்ஞ்ஞானக் கருணைவழி காக்கும் மேன்மை மிகப்படைத்த தமிழ்மனசை மிகவும் தூற்றி அஞ்ஞானப் பொய்களையே அடுக்கிக் கொண்டிங் கருந்தமிழின் பெருவாழ்வை அழிக்க எண்ணும் பொய்ஞ்ஞானத் தீமைகளைப் போக்க வேண்டும் புத்தாண்டுச் சபதமிதைப் புனைவோம் இன்று. 9 தெள்ளியநல் அறங்களையே தெளிவாய்ச் சொல்லித் தினையளவும் பிசகாமல் நடந்து காட்ட வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்ன வழிகாட்டித் திருக்குறளை வாழ்ந்த வள்ளல் பிள்ளைமனப் பேரறிஞன் பெம்மான் காந்தி பெருநெறியே தமிழ்த்தாயின் பேச்சா மென்று கள்ளமற நாமறிந்து கொள்வோ மானால் காத்திடலாம் தமிழ்மொழியை வளர்ச்சி காணும். 10 குறிப்புரை:- எழில்மிகுந்த - பேரழகு; (6)மூவேந்தர் -சேர,சோழ, பாண்டியர்;தினையளவு - கடுகளவு; பிசகாமல் - தவறாமல் (10); தோஷம் - குற்றம்(4); பரிவாய் - பக்குவமாய் (1); நான் என்ற அகங்காரம் - நான் என்கின்ற ஆணவ முனைப்பு (செருக்கு) இது மனிதனுக்குக் கூடாது."யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்" என்பது வள்ளுவர் வாக்கு.
|