96நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை
       நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்
       புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
சாதனையால் எப்போதும் எல்லாருக்கும்
       சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!       3

கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்
       கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்
       பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்
       பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த
       ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.       4

‘மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த
       மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை‘
எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி
       இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
நிலையிலுறும் முத்தியின்பம் தானே வந்து
       நிச்சயமாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
புனிதமுள்ள தமிழறிவைக் புதுக்கிச் சொன்ன
       புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.       5

உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்
       ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்
       பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்
       தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்
செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
       செய்கை சொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.       6