புலவர் சிவ. கன்னியப்பன் 99

கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம்
       கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும்;
மெச்சிடுநம் தாய்நாட்டின் நாக ரீகம்
       மென்மையெல்லாம் பாரதியார் பாட்டால் மேவும்.       2

தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத்
       தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும்
சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத்
       தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணித்
தெருத்தெருவாய்த் தேசீய பஜனை பாடிச்
       சென்னையிலும் உணர்ச்சிவரச் செய்த தீரன்
உருத்தெரியா திப்போதும் இங்கே நம்மை
       ஊக்குவதும் பாரதியின் உரைக ளேயாம்.       3

பெண்ணுலகம் புதுமைபெறப் பழமை பேசிப்
       பெருமையவர் உரிமைகளைப் பெரிதும் போற்றி
மண்ணிலவர் இழிவுபெறச் செய்து வைத்தோர்
       மடமைமிகும் கொடுமைகளை மறுத்துப் பாடிக்
கண்ணியத்தைப் பிற்காலக் கவிஞர் தம்முள்
       காத்ததுநம் பாரதியின் கவியே யாகும்;
எண்ணஎண்ணத் தமிழ்மொழிக்கோர் ஏற்ற மாகும்;
       பாரதியின் திருநாமம் என்றும் வாழ்க!       4

எங்கேயோ எட்டாத உலகம் தன்னில்
       இருப்பரென நாம்படித்த தெய்வம் எல்லாம்
இங்கேயே எம்முடனே எங்கும் காண
       ஏழைமக்கள் குடிசையிலும் இருப்பதாக்கும்.
சிங்காரப் புதுக்கவிகள் பாடி பலவும்
       தேவரெல்லாம் தமிழ்நாட்டில் திரியச் செய்தோன்
மங்காதாம் பாரதியின் நினைவைப் போற்றி
       மறவாமல் தமிழ்நாட்டார் வாழ்த்த வேண்டும்.       5

குறிப்புரை:-விலங்கு - கட்டு; ஒப்பரிய - ஈடு இணை இல்லாத;
துச்சம் - கீழ்மை; இழிவு; சிங்காரம் - அழகு; மங்காது - அழியாது.