85. சபதம் செய்துகொள்வோம் பல்லவி சபதம் செய்து கொள்வோம் - காந்தி சந்நிதி முன் இந்த (சபதம்) அநுபல்லவி சத்திய சோதனை மெய்த்தவம் ஆற்றிய உத்தமன் காந்தியின் பக்தியின் நித்தமும் (சபதம்) சரணங்கள் ஜாதியில் எவரையும் தாழ்வெனக் கருதோம் சமமுற யாவரும் சுகமுறத் தருவோம் போதைகள் எதையும் பொருளெனத் தீண்டோம் பூமியில் எவருக்கும் தீமையை வேண்டோம். (சபதம்)1 உண்மைகள் அல்லன உரைத்திட மாட்டோம், உயிர்க்கொலை செய்வதைப் பொறுத்திட மாட்டோம் பெண்மையின் பெருமையைக் கெடுப்பதும் எண்ணோம் பிறமத தூஷணை தொடுப்பதும் பண்ணோம். (சபதம்)2 உழவையும் தொழிலையும் உயிரெனக் காப்போம் உழைப்பின்றிச் சுகிப்பதைப் பழிப்புடன் பார்ப்போம் தொழுதுண்டு வாழ்வதைத் துச்சமென் றிகழ்வோம் தோட்டியின் வேலையும் மேலெனப் புகழ்வோம். (சபதம்)3 86. கவலைகள் சிதையும் கதை பல்லவி காலையும் மாலையும் காந்தியின் கதையைக் கருத்துடன் படிப்பவர் கவலைகள் சிதையும். (காலை) அநுபல்லவி மேலுள்ள பரம்பொருள் மீதுளம் பொருந்தும் மீறிய வெறிகளும் ஆறிடத் திருந்தும். (காலை) |