அநுபல்லவி சாந்தியை போதிப்பவர் சங்கோப சங்கமுண்டு சாதித்துக் காட்டினவர் ஏதிந்தக் காந்தியல்லால் (காந்தி) சரணங்கள் வேதமும் சாத்திரமும் வீதியிற் பின்தொடர வேள்வியும் தவங்களும் ஆள்செய்து முன்படர போதனை செய்வதிலும் சாதனை வேண்டுமென்று பொழுதும் பிறர்க்குழைத்த முழுதும் கருணைவள்ளல் (காந்தி)1 கொன்றிட எண்ணித் தன்மேல் குண்டொன்றை வீசிவிட்ட கொடியனை மன்னிக்கவும் இடைசென்று பேசிவிட்ட கன்றுடைப் பசுவைப்போல் கரைந்து கரைந்து மக்கள் கலிதர வேண்டுமென்று பலியாகத் தன்னைத்தந்த (காந்தி)2 ஏழைக் குருகினவர் எவருண்டு இவர்போல எங்கெங்குச் சென்றாலும் என்றென்றும் அதுவேலை பாழுக் குழைத்தாரென்று பழிவரப் பொறுப்போமா பாரெங்கும் காந்தியத்தை ஊரெங்கும் பரப்புவோம். (காந்தி)3 116. ஒன்றை உணர்விக்க வாழ்ந்த ஒரு காந்தி பல்லவி உடலுக்கும் உயிருக்கும் உள்ளே இருக்கும் ஒன்றை உணர்விக்க வாழ்ந்தவர் ஒரு காந்தி. அநுபல்லவி கடலுக்குள் அலைபோல் உலகத்தில் நிலைக்கெட்டுக் கரையேறத் தவிக்கின்ற கணக்கற்ற நமக்கெல்லாம் (உட) சரணங்கள் உணவும் உடையுமின்றி உறுபொருள் இல்லையென்று ஓய்வின்றி அலைந்துபின் மாய்கின்ற மனிதர்கள் பணமும் பதவிக்கென்று பாதகம் பலசெய்து பாவத்தை வளர்க்கின்ற தாபத்தை விலக்கிட (உட)1 |