இன்றுள்ளார் நாளைக்கில்லை என்பதைத் தினம்கண்டும் இச்சைப் படிக்குச்சென்று கொச்சை யின்பமும்கொண்டும் என்றென்றும் உள்ளவர்போல் கொன்றும்தன் நலந்தேடி இம்சையில் உழல்கின்ற நம்செயல் திருந்திட (உட)2 உயிருக்கும் மேலுள்ள ஒருசத்தை மெய்ப்பிக்க உடலைச் சுமந்திருந்தார் உலகத்தை உய்விக்க பெயருக்கு உணவுண்டு பிறருக்காய் உடைகட்டிப் பெரும்பாலும் மக்களைப்போல் அரும்பாடு பட்டாரேனும். (உட)3 117. கருணாமூர்த்தியின் பரிணாமம் பல்லவி கருணா மூர்த்தியின் பரிணாமம் திரு காந்தி மகான் வாழ்க்கை அநுபல்லவி அருணோதய மெனஅருள் ஒளி உதிக்கும் அண்ணல் காந்தியை எண்ணிடில் நமக்கும் (கருணா) சரணங்கள் உவமை தனக்கென ஒருபொருள் வேண்டான் உயிரையும் பிறர்க்கென உதவுதல் பூண்டான் கடமை என்பது கருணையைப் புரிகிற காரியம் அல்லது வேறிலை எனும்ஒரு (கருணா)1 விருப்பும் வெறுப்பும் தொடரா விரதன் வேற்றுமை யாவிலும் ஒற்றுமை கருதும் சிரிப்பும் மகிழ்ச்சியும் பரப்பிடும் செல்வன் சினமெனும் தீமையைச் சிறைசெய வல்லன் (கருணா)2 தரணியில் யாவரும் தன்இனம் என்றே தயையொடு அணைத்திடும் குணப்பெரும் குன்றாம் மரணமும் துன்பமும் மருட்டா வித்தன் மாநிலம் முழுவதும் வணங்கிடும் சுத்தன். (கருணா)3 |