பக்கம் எண் :

1

 
  பதிப்புரை
  பெண் கல்வி பெண்மானம் பெண்மதிமா லைகற்க
நண்ணுமொரு நாற்பொருளு நன்கு
       ஒரு நாடு உய்யவேண்டுமானால் அந்நாட்டின் மக்கள் கற்றல் கேட்டல் உடையவராய், உரனும் உழைப்பும் உதவியும் ஒற்றுமையும் உள்ளவராய், அறிவியல் துறையில் புதியது காணும் ஆரா வேட்கையராய் வாழ்தல் வேண்டும்.
     இவ்வாழ்வு பெரும்பாலும் 'பெண்கல்வி' யையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. பெண்கள் அன்புநிறை தாயராய், ஆர்வநிறை பிறப்பினராய், நண்புநிறை துணைவியராய், அறிவு ஆற்றல் அன்பு (ஞானம் கிரியை இச்சை) மூன்றையும் முற்றுவிக்கின்றனர். இவர்கள் கல்வி யுடையராய் இல்லாதவழி ஆடவர்கள் மேன்மை யுறுவது எங்ஙனம்?
     நம் தமிழ் நாட்டில் பெண்பாலார் பெரும் புலமை வாய்ந்த திருவினராய்ப் பண்டு திகழ்ந்தனர். அவர்கள் பாடிய அருந்தமிழ்ச்     செய்யுட்கள் தொகைநூற்கண் மிக்குக் காணலாம். அச் செய்யுட்கள் அவர்கள் இயல்பாகவே மக்களைக் கையகத் தேந்தி மகிழ்ந்து மகிழ்வுறுத்தும் பான்மைபோன்று மகிழ்வூட்டுவன. மேலும் தாய்மொழி என்று போற்றற்குரிய சீரும் சிறப்பும் வாய்ந்தது, அத் தாய்வழி வருகின்ற மொழியேயாம்.