பக்கம் எண் :

2

  பெண் கல்வி
       இடைக்காலத்தில் பெண்கள் கல்வி முற்றும் தடைப்பட்டும், ஆண்கள் கல்வி அரைகுறை நிலையில் முடைப்பட்டும், வேற்றுமொழி மயக்கம் மிகைப்பட்டும் நாடு நலிவுற்றது. இந்நிலையில் தமிழ் நாட்டின் ஆக்கம் ஒன்றே கருதிச் சிறந்த செய்யுள் உரைநடை நூல்கள் பதின்மூன்றுக்குமேல் யாத்து வெளியிட்ட பெரும்புலவர், திரு. ச. வேதநாயகம் பிள்ளை யவர்களாவர்.
     அவர்கள், 'பெண் கல்வி, பெண்மானம், பெண்மதிமாலை' என்னும் தலைப்பின்கீழ் பெண்களுக்கு வேண்டிய கல்வி யறிவு ஒழுக்கங்களும், அவர்கள் ஆடவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும், ஆடவர்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய நன்றிகளும், உரைநடையாலும், இசைப்பாவாலும் நூற்றுக்கு மேற்பட்ட தலைப்புக்களில் நன்காய்ந்து அமைத்துள்ளார்கள். அவைகள் படிக்கப் படிக்க 'நவில்தொறும் நூல்நயம் போலும்' இன்பந் தருவன.
     இனிமையும் எளிமையும் ஆற்றொழுக்கும் அமைந்த இந்நூலில் பிறமொழிச் சொற்கள் பெருவாரியாக இருந்தனவாகலின், இப்பதிப்பில் பிறமொழிச் சொற்களை நீக்கித் தமிழ்ச் சொற்களைப் பெய்து கருத்து மாறுபடாமலும் தமிழின் இயற்கையான இன்னோசை மிகுமாறும் செய்து மொழி நடை உயர்த்தப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். யாவரும் வாங்கிக் கற்றுக் கடைப்பிடித்து இன்புற்று எங்களை இத்தகைய செந்தமிழ்த் தொண்டில் ஊக்குமாறு வேண்டுகின்றோம்.
 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.