பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி111

     ‘‘தலைப்பு வேற மாத்தணும். பேர் புதுமையா இருந்தா நல்லா இருக்கும்.
ஹாஸ்யத்துக்கு ஒண்ணும் ஸ்கோப் இல்லை. அதையும் உண்டாக்கணும்.’’

     ‘‘........’’

     ‘‘என்ன வாத்தியாரே! நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ ஒண்ணும்
பதில் பேச மாட்டேங்கிறீயே?’’

     ‘‘பதில் பேசறதுக்கு என்ன இருக்கு? அதான் உனக்கே எல்லாம்
தெரியுதே?’’

     ‘‘நீ குத்தலாக பதில் சொல்ற மாதிரியல்ல இதுக்கு?’’

     ‘‘........’’

     ‘கவர்ச்சியா ஒரு பேரு வைக்கிறதிலியும் நடுநடுவே ஹாஸ்யம்
வருகிறாப்பிலே செய்யறதிலியும் நம்ம ஜில்ஜில் எமகாதகன்! அவன்கிட்ட இந்த
ஸ்கிரிப்டைக் கொடுத்து சரி பண்ணி வாங்கலாம்னு பார்க்கிறேன்...’’

     ‘‘சே! சே! அவன் எதுக்கு? ஜில் ஜில்லைவிட - இந்த மாதிரி
வேலைகளுக்கு உன்னோட பாண்டிபஜார் - ஏர்க்கண்டிஷன் ஸலூன்காரன்தான்
ரொம்பப் பொருத்தமானவன்...’’

     ‘‘நீ கேலி பண்றே?’’

     ‘‘டேய்; கோபால் - நீ என்னன்னு நினைச்சிட்டிருக்கேடா? இதென்ன
நாடகமா, அல்லது புரோ நோட்டா?’’

     முத்துக்குமரன் இந்தத் திடீர் சிம்ம கர்ஜனையில் கோபால் அப்படியே
ஒடுங்கிப்போனான். முத்துக்குமரனை எதிர்த்துப் பேச அவனுக்கு வாய்
வரவில்லை. அதிக நேரம் பதிலே சொல்லாமல் ஆத்திரமானதொரு
மௌனத்தைச் சாதித்த முத்துக்குமரன் திடீரென்று வாய் திறந்து சீறியபோது
கோபாலுக்கு வாயடைத்துப் போயிற்று. முத்துக்குமரனின் கோபம் திடீரென்று
புயலாக வந்த வேகத்தைப் பார்த்து மாதவியே அதிர்ந்து போனாள்.