கிறீங்க! ஆனா இங்கே பல பேருக்கு ‘ஆத்ம வேதனை’ன்னாலே என்னான்னு தெரியாது! ‘கிலோ’ என்ன விலையின்னு கேட்பாங்க...’’ ‘‘பரிதாபம்தான்! இத்தனை போலிகள் சேர்ந்து எப்படி லட்ச லட்சமாப் பணம் பண்றாங்கங்கறது பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்...’’ - டிபன் வந்தது, இருவரும் பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தார்கள். காபி வர சிறிது தாமதமாயிற்று. மெதுவாகவும், நிதானமாகவும், கேட்டு - ஆர்டர் எடுத்துக் கொண்டு, பின் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து வைத்ததன் காரணமாக அங்கே சிற்றுண்டி - காபி சாப்பிட்டு முடிக்கவே ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகியிருந்தது. திரும்பும் போது மாதவியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினான் முத்துக்குமரன். மறுநாள் காலை யாரும் எதிர்பாராமல் ஒருநாள் முன்னதாகவே திரும்பி வந்து விட்டான் கோபால். வந்தவுடனேயே நாடகத்தைப் பற்றிய வேகத்தையும், அவசரத்தையும் அவன் தன் பேச்சில் காண்பித்தான். காஷ்மீரிலிருந்து திரும்பிய தினத்தன்று கோபால் எங்கும் வெளியே போகவில்லை. நாடகப் பிரதியை வாங்கிக்கொண்டு போய்த் தன் அறையில் வைத்துப் படித்துவிட்டு மறுபடியும் மாலை ஆறு மணிக்கு முத்துக்குமரனைத் தேடி அவுட்ஹவுஸு க்கு வந்தான். அப்போது முத்துக்குமரனோடு மாதவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். கோபால் திடீரென்று உள்ளே பிரவேசித்தவுடன் மாதவி பயபக்தியுடனே எழுந்து நின்றாள். அவள் அப்படி எழுந்து நின்றதை முத்துக்குமரன் ரசிக்கவில்லை. ‘‘நாடகத்தைப் படிச்சாச்சு...’’ ‘‘.........’’ |