விட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் பங்காளாவுக்குப் போய்விட்டான். போகும் போது முத்துக்குமரனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை, அது முத்துக்குமரனுக்கு ஒரு மாதிரி விட்டுத் தெரிந்தது. ஆனாலும் சுபாவமான அகங்காரத்தினால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஏழு மணிக்குச் சாப்பாடு கொண்டு வந்த நாயர்ப் பையன், ‘‘ஐயா உங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு.’’ - என்று ஓர் உறையிலிட்டு ஒட்டிய கடிதத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முத்துக்குமரன் ஆவலோடு அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கத் தொடங்கினான். பையன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்து விட்டுக் கிளாஸில் தண்ணீரும் ஊற்றியபின் பதிலைக்கூட எதிர்பாராமல் பங்களாவுக்குப் போய்விட்டான். ஃ ஃ ஃ ‘‘அன்பிற்குரிய முத்துக்குமரனுக்குக் கோபால் எழுதியது. நீ மாதவியின் முன்னிலையில் என்னை எடுத்தெறிந்து பேசுவதும், கேலி செய்வதும், கண்டிப்பதும் உனக்கே நன்றாக இருந்தால் சரி. என்னிடம் அடங்கி வேலை செய்ய வேண்டியவர்களுக்கு முன்னால் நீ என்னை அவமானப்படுத்துவதை நான் விரும்ப முடியாது. அதை உன்னிடம் நேருக்கு நேர் சொல்ல நினைத்தும் தயக்கத்தினால் எழுதி அனுப்ப நேரிடுகிறது. இதை நீ புரிந்து கொண்டால் நல்லது. நாடகத்தை எழுதியிருப்பது நீ என்றாலும் அதை நடத்தவும் நடிக்கவும் போகிறவன் நான்தான் என்பது நினைவிருக்க வேண்டும். இப்படிக்கு, ‘‘கோபால்’’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் கோபத்தோடு கசக்கி மூலையில் எறிந்தான் முத்துக்குமரன். கோபாலின் சுயரூபம் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய |