ஆரம்பித்தது. தனக்கு முன்னால் கோழையைப் போலப் பயந்து சாகும் அவன் - பின்னால் போய் என்னென்ன நினைக்கிறான் என்பதைக் கடிதம் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. கோபாலின் மேல் ஏற்பட்ட கொதிப்பில் சாப்பிடக்கூடத் தோன்றாமல் சிறிது நேரம் கடந்தது. அப்புறம் பேருக்கு ஏதோ சாப்பிட்டுக் கடனை கழித்த பிறகு சிறிது நேரத்தில் படுக்கையில் போய் சாய்ந்தான். மாதவி தன்னிடம் நெருங்குவதோ, ஒட்டிக் கொண்டாற் போலப் பழகுவதோ கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தன்னைப் பற்றியும் மாதவியைப் பற்றியும் கோபாலைப் பற்றியும் அரங்கேற வேண்டிய புதிய நாடகத்தைப் பற்றியுமே சிந்தித்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன். ‘மறுநாள் ரிஹர்ஸலுக்காகத் தான் குறிப்பிட்டுச் சொல்லியனுப்பிய நேரத்தில் கோபால் அங்கே வருகிறானா இல்லையா?’’ என்பதை அறிவதில் அவன் ஆவலாயிருந்தான். அப்படி ஒரு வேளை தான் சொல்லியனுப்பியிருந்தபடி ரிஹர்ஸலுக்குத் தன்னைத் தேடி வராமல் கோபால் புறக்கணிப்பானானால் எழுதிய நாடகத்தோடு அந்த வீட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட வேண்டும் என்ற குரூரமான பழிவாங்கும் ஆசையும் அவனுள் கிளர்ந்தது அப்போது. ஆனால் மறுநாள் காலையில் அப்படி எல்லாம் நேரவில்லை. ரிஹர்ஸலுக்கென்று அவன் குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே கோபால் அவுட்ஹவுஸிற்குத் தேடி வந்து விட்டான். மாதவியும் சரியான நேரத்திற்கு அங்கே வந்து விட்டாள். கோபால் அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டது முத்துக்குமரனுக்கு ஓரளவு வியப்பை அளித்தாலும் அவன் |