பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி115

அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. சுபாவமாக தான் செய்ய
வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினான் அவன். நாடகக் கம்பெனி
நடைமுறைப்படியே எல்லாம் நிகழ்ந்தன. பூஜை போட்டு நாடகத்தின்
ஒத்திகையைத் தொடங்குவதற்கு முன் கதையின் இயல்பு - கதாபாத்திரங்களின்
இயல்பு பற்றிக் கோபாலுக்கும் மாதவிக்கும், விளக்கிச் சொல்லத் தொடங்கினான்
முத்துக்குமரன். அதைச் சொல்லி விளக்கி விட்டுக் கதாபாத்திரங்களின்
பெயர்களுக்கு நேரே நடிப்பவர்களின் பெயர்களை நிரப்பிக் கொடுக்குமாறு
கோபாலிடம் தாள்களைக் கொடுத்தான் அவன்.

     கழைக்கூத்தி - மாதவி
     பாண்டியன் - கோபால்

     புலவர்கள் - சடகோபன், ஜயராம் என்று தொடங்கி மொத்தம்
பதினெட்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்களின் பெயர்களைப் பூர்த்தி செய்து
முத்துக்குமரனிடம் கொடுத்தான் கோபால்.

     ‘இந்தப் பதினெட்டுப் பேர்லே நாம டைப் செய்திருக்கிற பிரதி மூணு
பேருக்குத்தான் வரும். பாக்கி ஆளுங்க வசனம் மனப்பாடம் பண்ண இதைப்
பார்த்துப் பிரதி எடுத்துக்கிட்டுப் போகணும்’’ என்றான் முத்துக்குமரன்.
கோபாலும் உடனே ‘‘ஆமாம்! அப்படித்தான் செய்யணும். அவங்க பிரதி
எடுத்துக்கிட்டுப் போக நான் ஏற்பாடு செய்யிறேன்’’ - என்று அதற்கு
ஒப்புக்கொண்டான். கோபாலுக்கும், மாதவிக்கும் காலை நேரத்தில் ஒத்திகை
என்றும், மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மாலை நேரத்தில் ஒத்திகை
என்றும் ஏற்பாடு செய்து கொள்ளலாமென்று முத்துக்குமரன் தெரிவித்த கருத்து
ஒப்புக் கொள்ளப்பட்டது. கோபால் ஒத்திகையின் போது திடீரென்று நாடக
வசனத்தில் ஒரு பகுதியைத் திருத்த வேண்டுமென்று அபிப்பிராயம் தெரிவிக்க
முற்பட்டான்.