‘‘தப்பாயிருந்தா மன்னிச்சுக்குங்க. நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே.’’ ‘‘எந்த அர்த்தத்திலே சொன்னா என்ன? இன்னிக்கி எந்தக் கலையும் அந்தக் கலைக்காகவே இருக்கிறதாகத் தெரியலை. மந்திரி தலைமை வகிக்கிறதுக்காகவும் பேப்பர்லே நியூஸ் வர்றதுக்காகவும்தான் எல்லாமே இருக்கிறதாகத் தோணுது...’’ ‘‘இன்னொரு விஷயம்...உங்ககிட்ட ரொம்பப் பணிவாகக் கேட்டுக்கிறேன். நீங்க தப்பா நெனைக்க மாட்டீங்கன்னாத்தான் அதை நான் உங்களிடம் சொல்லலாம்.’’ ‘‘விஷயத்தையே சொல்லாம இப்படிக் கேட்டா உனக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?’’ ‘‘நீங்க கோபப்படாமல் பொறுமையாகக் கேட்கணும். அதை எப்படி உங்ககிட்டச் சொல்ல ஆரம்பிக்கிறதுன்னே எனக்குத் தயக்கமா இருக்கு. நல்ல வேளையா இன்னிக்கு முதல் நாள் ரிஹர்ஸல்லே அப்படி எதுவும் நடக்கலை...’’ ‘‘எது நடக்கலை?’’ ‘‘ஒண்ணுமில்லே! ரிஹர்ஸலின்போது கோபால் சார் என்னைத் தொட்டு நடிக்கிறதையோ, நெருக்கமாகப் பழகறதையோ, திடீர்னு நான் எதிர்க்கவோ, கடுமையாக உணர்ந்து முகத்தைச் சுளிக்கவோ முடியாது. அதையெல்லாம் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. நான் அபலை, என்னைத் தொடறவங்களை எல்லாமே நானும் தொட விரும்பறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது.’’ இப்படிக் கூறியபோது ஏறக்குறைய அழுது விடுவது போன்ற நிலைக்கு அவள் குரல் பலவீனமடைந்துவிட்டது. கண்களின் பார்வை அழாத குறையாக அவனை இறைஞ்சியது. அவன் அவளைக் கூர்ந்து |