‘‘அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் நான் உங்களை நினைத்தும் நடுங்க வேண்டியிருக்கிறது.’’ ‘‘கோபாலைக் கண்டு நடுங்கும் நடுக்கத்திற்கும் இந்த நடுக்கதிற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டானால்தான் நான் பெருமைப்படலாம்...’’ -இப்படிக் கூறியவுடன் அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், புன்னகை பூத்தாள். ‘‘நீங்கள் ரொம்பப் பொல்லாதவர்...’’ ‘‘ஆனாலும் என்னைவிட பொல்லாதவர்களுக்குத்தான் நீ பயப்படுவாய் என்று தெரிகிறது.’’ ‘‘அன்புக்குப் கட்டுப்பட்டுப் பயப்படுவதற்கும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு பயப்படுவதற்கும் வித்தியாசமிருக்கிறது.’’ அவள் பேச்சு உண்மைப் பிரியத்துடனும் மனப்பூர்வமாகவும் ஒலிப்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் காலையிலிருந்து ஒத்திகைகள் வேகமாகவும் தீவிரமாகவும் நடைபெறத் தொடங்கின. மந்திரி கொடுத்திருந்த தேதியில் அவருடைய தலைமையிலேயே நாடகத்தை அரங்கேற்றிவிட வேண்டும் என்பதில் கோபால் அதிக அக்கறை காட்டினான். குறிப்பிட்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே ஒத்திகைகளை முடித்து நாடகத்தைத் தயாராக்கிவிட ஏற்பாடுகள் நடந்தன. பாடல்களை எல்லாம் பின்னணிப் பாடகர் - பாடகிகளைக் கொண்டு ப்ரீ ரிக்கார்ட் செய்து விட்டான் கோபால். சினிமாத்துறையிலிருந்த மியூஸிக் டைரக்டர் ஒருவர்தான் பாடல்களுக்கு இசையமைத்துக் கவர்ச்சியான ட்யூன்கள் போட்டிருந்தார். நாடகம் - மொத்தம் எவ்வளவு நேரம் வரும் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுவதற்கும்; ஒரு ஃபைனல் ஸ்டேஜ் ரிஹர்சலுக்கும் பக்கா அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரஸ் ப்ரிவ்யூவையும் |