| அப்துல்லா எவ்வளவு பெரிய கோடீசுவரர் என்பதைப் பற்றியும் விவரித்தாள். ‘‘பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ரெண்டு சங்கீத வித்வானோ, ரெண்டு நாடகக்காரனோ சந்திச்சுக்கிட்டாங்கன்னா - தங்கள் தங்கள் கலைகளைப் பத்தி அக்கறையாப் பேசிக்குவாங்க. இப்ப என்னடான்னா ‘யாருக்கு விருந்து போடலாம்! - யாருக்கு எது செய்து என்ன காரியத்தைச் சாதிக்கலாம்’னு தான் பேசிக்கிறாங்க. கலைத்துறை அழுகிப் போயிருக்கறதுக்கு இதைவிட வேறென்ன நிதர்சனமான சாட்சி வேண்டும்?’’ ‘‘அப்படியே அழுகிப் போயிருந்தாலும் அதை நீங்க ஒருத்தரே சீர்திருத்திப்பிட முடியும்னு நினைக்கிறீர்களா?’’ ‘‘நிச்சயமா இல்லே! உலகத்தைச் சீர்த்திருத்தறதுக்காக நான் அவதாரமும் எடுக்கலை. ஆனா இரண்டு தலை முறைகளை நெனைச்சுப் பார்க்கிறேன். ராஜாதி ராஜன்லாம் தன்னோட வீட்டைத் தேடிவரச் செய்த கம்பீரமான பழைய கலைஞர்களையும், மந்திரிகளையும் பிரமுகர்களையும் வீடுதேடி ஓடும் கூன் விழுந்த முதுகுடன் கூடிய இன்றையக் கலைஞர்களையும் சேர்த்து நினைக்கறப்ப எனக்கு வேதனையாயிருக்கு மாதவி. -அவன் இந்த வாக்கியங்களைச் சொல்லிய உருக்கமான குரலுக்குக் கட்டுப்பட்டு என்ன பதில் சொல்லதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தாள் மாதவி. சிறிது நேர மௌனத்திற்குப்பின் பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் அவள். ‘‘நாடகத்தைப்பத்தி ஜனங்க ரொம்ப நல்லாப் பேசிக்கத் தொடங்கிட்டாங்க. எனக்கு, ஒனக்குன்னு சபாக்காரங்க இப்பவே ‘டேட்’ கேக்கிறாங்க! நல்ல கட்டுக் கோப்போட கதையை எழுதியிருக்கீங்க, அதுதான் காரணம்...’’ |