பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி153

மாதவி முத்துக்குமரனையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறாள்
என்பதைக் கண்டு எரிச்சலுமாகக் கடுகடுப்பான முகத்தோடு அவளை
எதிர்கொண்டான் அவன்.

     ‘‘அப்பவே போகச் சொல்லியிருந்தேனே உன்னை? நீ இப்பத்தான்
போறியா?’’

     ‘‘முடியலை. இவரை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப்
போனேன். நேரமாயிடுச்சு. இப்பத்தான் புறப்பட முடிஞ்சிது.’’

     ‘‘அது சரி! சாரை ஏன் வீணா சிரமப்படுத்தறே? நீ மட்டும்
அப்துல்லாவைக் கூப்பிடப் போயிட்டு வந்தாப் போதாது?’’ என்று நாசூக்காக
முத்துக்குமரனைக் கத்திரித்துவிட முயன்றான் கோபால்.

     அந்த நிலையில் முத்துக்குமரனே முன் வந்து கோபாலுக்குப் பதில்
சொல்லி மாதவியைத் தர்மசங்கடமான நிலையிலிருந்து தப்புவித்தான்.

     ‘‘இல்லே! நானேதான் ‘ஓஷியானிக்’ - எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு
புறப்பட்டேன். நானும் இப்படிக் காத்தாடப் போயிட்டு வரேனே...’’

     கோபாலுக்கு மேற்கொண்டு எப்படி முத்துக்குமரனைச் சமாளித்துக் கீழே
இறக்குவது என்று தெரியவில்லை.

     ‘‘சரி! ரெண்டு பேருமே போய் அவரை அழைச்சிட்டு வாங்க.
வண்டியிலே வர்றப்ப அவருட்ட விவாதம் ஒண்ணும் வச்சுக்க வேண்டாம்.
நமக்கு அவரிட்டக் காரியம் ஆகணும். வீணா அவர் மனசு புண்படக் கூடாது’’
என்று பொதுவாக எச்சரித்து விட்டு உள்ளே போனான் கோபால். ஆனால்
உள்ளூற மாதவியின் மேல்தான் கடுங்கோபத்தோடு போனான் அவன்.
மாதவிக்கு அது ஓரளவு புரிந்து விட்டிருந்தாலும் முத்துக்குமரனிடம் அவள்
அதைக் காண்பித்துக் கொள்ளவில்லை.