| ‘‘அதெல்லாம் நெறையக் கேள்விப்பட்டிருக்கோம்.’’ ‘‘நமக்கு வியாபாரம் டயமெண்ட் மெர்ச்சண்டுங்க, ஒரு பொழுது போக்குக்காகத்தான் இந்தக் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்றோம்.’’ முத்துக்குமரனுக்கு அந்தப் பேச்சு அலுப்புத் தட்டியது, மாதவிக்கு ஜாடை காண்பித்தான். ‘‘புறப்படறலாங்களா? நீங்க தயாராகுங்க. கோபால் சார் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பாரு. சீக்கிரமாப் போனோம்னா நல்லது’’ என்ற அப்துல்லாவை மெல்ல அவசரப்படுத்தினாள் அவள். அப்துல்லா உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனார். அறையில் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியருகே பெரிதும் சிறிதுமாகப் பலவகை ‘செண்ட்’ பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. அப்துல்லா உடை மாற்றிக் கொண்டு வந்து அந்தக் கண்ணாடியருகே நின்று பூசிக்கொண்ட ஒரு ‘செண்ட்’டின் மணம் மின்சாரம் போல வேகமாக அறை முழுவதும் பரவியது. பாட்டிலோடு இணைக்கப்பட்டிருந்த ஸ்பிரே செய்யும் குமிழால் அவர் அந்த வாசனைப் பொருளைக் கழுத்திலும், சட்டை மேலும் பலமுறை அழுத்தி அழுத்தி ஸ்பிரே செய்து கொண்டார். உடை மாற்றுவதிலும், தயாராவதிலும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் வேகம், ஃபேன்ஸி எல்லாம் நிரம்பியவராக இருந்தார் அப்துல்லா. அவர் ஹோட்டல் பையனைக் கூப்பிட்டு அவர்கள் பருகுவதற்கு டீ வரவழைத்தார். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை. அவரே டீயை ‘மிக்ஸ்’ செய்து மூன்று கோப்பைகளிலும் நிரப்பத் தொடங்கிய போது மாதவியும் அவருக்கு உதவி செய்தாள். டீயை ‘மிக்ஸ்’ செய்வதில் அவள் தனக்கு உதவ முன் வந்ததில் அப்துல்லாவுக்கு மகிழ்ச்சி. |