| முத்துக்குமரன் பொறுமையாக உட்கார்ந்திருந்தான். டீயைப் பருகியதும் அவர்கள் மூவருமாகப் புறப்பட்டு விட்டார்கள். புறப்படுவதற்கு முன் அந்த வாசனை ஸ்பிரே பாட்டிலைப் பற்றி விசாரித்தாள் மாதவி. உடனே அப்துல்லா ‘ஐ வில் கிவ் யூ...யூஸ் இட்...’’ என்று அதை அவளிடமே கொடுத்து விட்டார். ‘‘இல்லீங்க, நான் சும்மா விசாரிச்சேன். அவ்வளவு தான்’’ என்று அவள் மறுத்தும் கேட்காமல், ‘‘நோ நோ கீப் இட்...டோண்ட் ரெஃப்யூஸ்’’ என்று அவளிடமே அதைக் கொடுத்துவிட்டார். முத்துக்குமரனுக்கு மாதவிமேல் கோபம் கோபமாக வந்தது. அவள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் அப்துல்லாவிடம் போய் செண்ட் பற்றி விசாரித்ததனால் அவர் ஏதோ ஒரு பிச்சைக்காரிக்குத் தூக்கிக்கொடுப்பதுபோல் மாதவியிடம் பாட்டிலைத் தூக்கிக் கொடுத்ததை முத்துக்குமரன் அவ்வளவாக ரசிக்கவில்லை. வாசனைப் பொருளுக்கும், பூவுக்கும், புடவைக்கும், பகட்டுக்கும் சபலமடையாத அழகிய பெண்களே உலகில் இருக்க முடியாது போலும் என்று நினைத்துக் கொண்டான் அவன். எப்படி ஒரு குடும்பப் பெண் வாசனைப் பொருள், பூ, புடவை போன்றவற்றைப் பற்றி அந்நிய ஆடவனிடம் விசாரிப்பது விரசமோ, அப்படியே மாதவி அப்துல்லாவிடம் விசாரித்ததும் கொஞ்சம் அடக்கக் குறைவாகவே தோன்றியது அவனுக்கு. சினிமாத் துறையில் ஊறியதனால் வந்த வினை இது என்று நினைத்து உள்ளூற அவளை அவன் மன்னிக்கவும் செய்தான். காரில் மாம்பலம் செல்லும்போது அப்துல்லா மலேயாப் பயணத்தைப்பற்றி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ‘‘உங்க குழுவிலே மொத்தம் எத்தினி பேர் வருவாங்க? யார் யார் பிளேன்ல வருவாங்க? யார் யார் கப்பலிலே வருவாங்க.’’ |