| 	 படுத்தி வீட்டுக்கு அனுப்பி வை’’ - என்று கோபால் முத்துக்குமரனையே     வேண்டினான்.                முத்துக்குமரன் அந்த வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கவில்லை.     சிரித்துவிட்டுப் பேசாமலிருந்து விட்டான். மாதவி எந்த அளவுக்கு     மனத்திடமுடையவள் அல்லது இல்லாதவள் என்பதை அப்போது கவனித்துப்     பார்த்து விட விரும்பியவன் போல் நின்று கொண்டிருந்தான் முத்துக்குமரன்.                திடீரென்று கோபால் ஒரு காரியம் செய்தான். சைகை செய்து டிரைவரை     ஆசனத்திலிருந்து இறங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு, ‘‘வா! நானே உன்னைக்     கொண்டு வந்த டிராப் செய்கிறேன்’’ என்று மாதவியைக் கெஞ்சத்     தொடங்கினான் கோபால். அவன் வார்த்தைகளை மீற முடியாமல் மெல்ல     மெல்லத் தயங்கித் தயங்கி முத்துக்குமரன் நின்ற பக்கத்தைப் பார்த்தபடியே     முன் ஸீட் கதவைத் திறந்து ஏறிக் காரில் அமர்ந்தாள் மாதவி. கோபால்     காரைச் செலுத்தினான்.                வருகிறேன் என்பதற்கு அடையாளமாக அவள் முத்துக்குமரனை     நோக்கிக் கையை உயர்த்தி ஆட்டினாள். அவன் பதிலுக்குக் கையை     ஆட்டவில்லை, கார் அதற்குள் பங்களா ‘கேட்’டைக் கடந்து வெளியே     ரோட்டுக்கு வந்து விட்டது. தான் இப்படிச் செய்தது முத்துக்குமரனுக்குப்     பிடிக்காது என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள். கார் வீடு போய்ச்     சேருகிற வரை கோபாலுடன் அவள் பேசவில்லை. கோபாலும்     அப்போதிருக்கும் அவள் மனநிலையை அநுமானித்தவனாக அவளோடு     எதுவும் பேச முடியவில்லை. லாயிட்ஸ் ரோடு வரை வந்து அவளை அவள்     வீட்டில் ‘டிராப்’ செய்துவிட்டுத் திரும்பிவிட்டான் அவன். இறங்கி     வீட்டுக்குள்ளே சென்றதும் பதறும் மனதுடன் நெஞ்சு படக் படக்கென்று     அடித்துக் கொள்ள முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்தாள் அவள்.  	 |