தான் அவளிடம் அதிகமாக இருந்தன. அவளால் முத்துக்குமரனின் கோபத்தைக் கற்பனைசெய்து பார்க்கவும் முடியாமல் இருந்தது. அன்று அவள் மனக்குழப்பத்துடனும் போராட்டத்துடனும் வீட்டிலேயே இருந்து விட்டாள். இரண்டு மணிக்கு மேல் கோபாலின் டிரைவர் வந்து அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். அதே போல முத்துக்குமரனிடம் பாரங்களைப் பூர்த்தி செய்து வாங்கியிருப்பார்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்தாள் அவள். முதல் நாளிரவு நிகழ்ச்சியால் தன் மேலும் கோபால் மேலும் ஏற்பட்டிருக்கும் கோபத்தில் முத்துக்குமரன் மலேயாவுக்கு வரமறுத்தாலும் மறுக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஓர் அப்பழுக்கற்ற வீரனின் தன்மானமும் கவிஞனின் செருக்குமுள்ள முத்துக்குமரனை நினைந்து நினைந்து உருகினாலும் சில சமயங்களில் அவனை அணுகுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் மேல் அளவற்ற பிரியமும், அந்தப் பிரியம் போய் விடுமோ என்ற பயமுமாக அவள் மனம் சில வேலைகளில் இருதலைக் கொள்ளி எறும்புபோலத் தவித்தது. முத்துக்குமரன் மலேயாவுக்கு வரவில்லை என்றால் தானும் போகக்கூடாது என்று எண்ணினாள் அவள். அப்படி எண்ணுகிற அளவிற்குத்தான் அவள் மனத்தில் துணிவு இருந்தது. அந்தத் துணிவை வெளிக்காட்டிக் கொள்ளும் நெஞ்சுரம் அவளுக்கு இல்லை. ஜனவரி முதல் வாரத்திலிருந்து மூன்று வார காலம் மலேயா - சிங்கப்பூரில் சுற்ற வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. முத்துக்குமரன் உடன் வராமல் தான் மட்டும் தனியாக கோபாலுடன் வெளியூரில் சுற்றுவதற்குப் பயப்பட்டாள் அவள். வாழ்க்கையில் முதன் முதலாகச் சமீபகாலத்தில் தான் கோபாலிடம் இப்படிப்பட்ட வேற்றுமையும் பயமும் அவளுக்கு ஏற்பட்டிருந்தன. |