குமரனுக்கும் அதே இதழை அனுப்பி வைத்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது. தான் முத்துக்குமரனோடு சேர்ந்து நிற்பது போன்ற அந்தப் படமும், தன்னைப் போன்ற ஒருத்தியையே மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறிய முத்துக்குமரனின் பேட்டி வாக்கியமும் - கோபாலுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என்பதை உணர்ந்தாள் அவள். இருவரையுமே அன்று சந்திக்கப் பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு. கோபாலையும் முத்துக்குமரனையும் சந்திக்கத் தயங்கி அன்று மாம்பலத்துக்குப் போகாமலே இருந்துவிட முடிவு செய்தாள் அவள். ஆனால் எதிர்பாராத விதமாகப் பதினோரு மணிக்குக் கோபால் அவளுக்கு ஃபோன் செய்து விட்டான். ‘‘பாஸ்போர்ட் அப்ளிகேஷன்லியும் வேறு ரெண்டொரு பேப்பர்லியும் கையெழுத்துப் போடணும். ஒரு நடை வந்திட்டுப்போனா நல்லது.’’ ‘‘எனக்கு உடம்பு நல்லாயில்லே. அவசரம்னா யாரிட்டவாவது குடுத்தனுப்பிடுங்க, கையெழுத்துப் போட்டு அனுப்பிடறேன்’’ என்று அங்கே போவதைத் தட்டிக் கழிக்க முயன்றாள் அவள், அவளுடைய முயற்சி பலித்தது. அவள் கையெழுத்துப்போட வேண்டிய பாரங்களை டிரைவரிடம் கொடுத்தனுப்ப ஒப்புக்கொண்டான் கோபால். முத்துக்குமரன் அவளுக்கு ஃபோன் செய்ய விரும்பவில்லை என்று தெரிந்தாலும் அவளே அவனுக்கு ஃபோன் செய்வதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. முதல் நாளிரவு அவன் கூறிய பதில் இன்னும் அவள் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் கடுமையாகப் பேசிவிட்டான் என்ற உறுத்தலைவிடத் ‘தான் தவறு செய்துவிட்டோம்’ என்ற உறுத்தலும் பதற்றமும் |