| தன் மனம் எப்படி எங்கே பலவீனப்பட்டது என்பதை இப்போது அவளாலேயே அநுமானிக்க முடியாமலிருந்தது. தான் செய்ததை நினைத்த போது அவளுக்கே அவமானமாயிருந்தது. மறுநாள் முத்துக்குமரனின் முகத்தில் விழிப்பதற்கே பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவளுக்கு கோபால் தானே வீட்டில் கொண்டு போய் வீடுவதாகக் கெஞ்சியபோது தான் எப்படி உடனே மனம் நெகிழ்ந்து அதற்கு இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு வியப்பாகவே இருந்தது. காலையில் எழுந்ததும் இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த இரண்டாவது அதிர்ச்சிக்குப் பின் கோபாலைச் சந்திப்பதற்கும் அவள் கூசினாள்; பயப்பட்டாள் என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. முத்துக்குமரனைக் கனியழகன் பேட்டி கண்டு வெளியிட்டிருந்த ஜில் ஜில் இதழ் அன்று காலை முதல் தபாலில் அவளுக்குக் கிடைத்தது. ஜில் ஜில் கனியழகன் அந்தப் பேட்டியின் இடையே ஒரு புகைப் படத்தையும் பிரசுரித்திருந்தான். முத்துக்குமரனின் தனிப் படத்தையும் மாதவியின் தனிப் படத்தையும் - வெட்டி இணைத்து அருகருகே நிற்பது போல ஒரு ‘பிளாக்’ தயாரித்து வெளியிட்டிருந்தான். ‘ஜில் ஜில்’ ‘மாதவியைப் போல ஒரு பெண் கிடைத்தால் மணந்து கொள்வேன்’ - என்று முத்துக்குமரன் கூறியதாகவும் பேட்டியில் வெளியிட்டிருந்தது. அந்தக் கனியழகன்மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. கோபாலுக்கும் அதே பத்திரிகை அன்று காலைத் தபாலில் கிடைத்திருந்தால் என்ன உணர்வை அவன் அடைந்திருப்பான் என்று அநுமானிக்க முயன்றாள் அவள். ஜில் ஜில் கனியழகன் பேட்டிக்குரியவர் என்ற முறையில் முத்துக் ச - 11 |