அப்போது நாயர்ப் பையன் ஓடி வந்து, ‘‘டாக்ஸி ரொம்ப நேரமா வெயிட்டிங்கில் இருக்கு. டிரைவர் சத்தம் போடறான்’’ - என்று அவள் நிறுத்தி விட்டு வந்த டாக்ஸியைப் பற்றி நினைவூட்டினான். தான் ஒரு டாக்ஸியில் வந்ததையும் அது வெகு நேரமாக வெயிட்டிங்கில் நிற்பதையும் அவள் அப்போதுதான் நினைவு கூர்ந்தாள். உடனே முத்துக்குமரனின் பக்கம் திரும்பி, ‘‘நான் புறப்படட்டுமா? இல்லை இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகட்டுமா?’’ என்று கேட்பது போன்ற பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அவளைப் போகச் சொன்னான். ‘‘டாக்ஸி நிற்கிறதுன்னாப் புறப்பட்டுப் போயேன். நாளைக்குப் பார்த்துக்கலாம். அவள் போக மனமின்றியே புறப்பட்டாள். அவனிடம் இன்னும் நிறையப் பேச வேண்டுமென்று மனத்தில் ஒரு குறையோடுதான் புறப்பட்டாள் அவள். அவன் தோட்டத்திலிருந்து எழுந்து அவுட்ஹவுஸு க்குப் போய்ச் சேர்ந்தான். மறுநாள் காலையில் பிரயாணத்துக்காகப் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி - அவளுக்கு டெலிபோன் செய்தான் கோபால். பாண்டிபஜாரில் ஏர்க்கண்டிஷன் செய்த பட்டு ஜவுளிக்கடை ஒன்றில் கோபாலுக்கு அக்கவுண்ட் உண்டு. நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுப் புடவைகளைக்கூட அவள் அங்கே போய்த்தான் எடுத்துக் கொள்வது வழக்கம். பில் நேரே அங்கிருந்து கோபாலுக்கு அனுப்பப்பட்டுவிடும். ‘‘பதினொரு மணிக்கு நீ அங்கே வருவேயின்னு கடைக்காரர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடட்டுமா?’’ - என்று கோபால் அவளிடம் கேட்ட போது அவள் சரி என்று சொல்லியிருந்தாள். அதனால் அவசர |