பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி177

                              14

     அந்தப் பத்திரிகைப் படத்தைப் பற்றிய கவனத்தை கோபாலிடமிருந்து
வேறு திசைக்குத் திருப்பிவிட முயன்றாள் மாதவி. முத்துக்குமரன் கோபாலின்
கேள்விகளைப் பொருட்படுத்தாமலே இருந்து விட்டான். இப்படிப்பட்ட
கேள்விகளைத் தங்களிருவரையும் தேடிவந்து அவன் கேட்பதே
சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு; முத்துக்குமரன்
கோபால் இருவருமே கோபித்துக்கொண்டு விடாமல் நாசூக்காக நிலைமையைச்
சமாளித்துவிட விரும்பினாள் மாதவி. அவளுடைய முயற்சி பயனளிக்கவில்லை.

     சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், ‘‘இராத்திரி பிளேன்ல
அப்துல்லா ஊருக்குத் திரும்பராரு. நான் வழியனுப்ப ‘ஏர்ப்போர்ட்’ போறேன்.
நீங்க யாராச்சம் வரீங்களா?’’ என்று கோபால் கேட்டான்.

     முத்துக்குமரன், மாதவி இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டனரே ஒழிய அவனுக்கு மறுமொழி கூறவில்லை. அவர்கள்
தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவன்,

     ‘‘சரி நான் போயிட்டு வரேன்’’ - என்று விமான நிலையத்துக்குப்
புறப்பட்டான். போகும் போது அந்தப் பத்திரிகையை அவன் எடுத்துச்
செல்லவில்லை. அங்கேயே புல்தரையில் மறந்தார்ப் போலப் போட்டு விட்டுப்
போய் விட்டான்.

     ‘‘அப்துல்லாவை வழியனுப்பறத்துக்கு நீ போவியே? போகலியா?’’ -
என்று முத்துக்குமரன் கோபால் தலைமறைந்ததும் மாதவியைக் கேலி செய்தான்.