பக்கம் எண் :

176சமுதாய வீதி

     அவர்கள் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கோபால்
வெளியேயிருந்து திரும்ப வந்து விட்டான், அவுட்ஹவுஸில் போய்த் தேடிவிட்டு
அவனும் தோட்டத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து
சேர்ந்தான். அவன் கையில் அந்தப் பத்திரிகை இருந்தது.

     ‘‘இதைப் பாத்தியா வாத்தியாரே? உன்னைப் பத்தி ரொம்பப் பிரமாதமா
ஜில் ஜில் எழுதியிருக்கானே?’’

     ‘‘பிரமாதமா ஒண்ணுமில்லே. நான் சொன்னதைத் தானே
எழுதியிருக்கான்? பிரமாதமா இருக்கிறதைப் பிரமாதமா எழுத
வேண்டியதுதானே?’’

     ‘‘அப்படியா? அப்ப எல்லாமே நீ சொன்னதைத்தான்
எழுதியிருக்காங்கன்னு சொல்லு.’’

     இந்த கேள்வியைக் கோபால் குறும்புத்தனமான குரலில் வினவினான்.
எதற்காக அவன் இதை இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கேட்கிறான் என்பது
அவர்கள் இரண்டு பேருக்குமே விளங்கவில்லை. சிறிது நேரமாகிய பின்பே
இருவருக்கும் அவன் அப்படிக் கேட்டதன் உள்ளர்த்தம் மெல்ல மெல்லப்
புரியத் தொடங்கியது. ‘முத்துக்குமரன் மாதவியை மணந்து கொள்ள
ஆசைப்படுகிறார்’ - என்ற அர்த்தத்தில் அந்தப் பத்திரிகைப் பேட்டியில்
காணப்பட்ட ஒரு பகுதிதான் கோபாலின் எல்லாக் கேள்விகளுக்கும்
காரணமென்று தெரிய வந்தது.

     சிறிது நேரம் மூவருக்குமிடையே மௌனம் நிலவியது.

     ‘‘இந்தப் பேட்டியில் இருக்கிற படம்கூட சமீபத்திலே எடுத்ததுதான்
போலிருக்கு’’ - என்று அவர்கள் இருவரும் இணைந்ததாக வெளியாகியிருந்த
புகைப்படத்தைக் காட்டிக் கோபாலே மீண்டும் தொடங்கினான்.