‘‘நான் அங்கெல்லாம் வராம இருந்தா உங்களுக்கெல்லாம் ரொம்ப சௌகரியமாகயிருக்குமில்லே?’’ ‘‘சும்மா இப்படி எல்லாம் குத்தலாகப் பேசாதீங்க. நீங்க வந்தாத்தான் எனக்கு சௌகரியமாகும் - ’’ தன் காதில் பூக்களாக உதிரும் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே அருகில் நின்ற அவளுடைய செழிப்பான தோள்களைப் பற்றினான் முத்துக்குமரன். அந்தப் பிடி இறுகி வலிப்பது போல் - அதன் சுகத்தில் மூழ்கிக் கொண்டே சிணுங்கினாள் அவள். பூங்குவியலாய் அவள் மேனி அவனைப் பிணைத்து இறுக்கியது. மூச்சுக்கள், பரஸ்பரம் திணறும் ஒலிகள் சுகத்தைப் பிரதி பலிப்பனவாக ஒலித்தன. இருவர் காதிலும் அந்த மூச்சுக்களே மதுர சங்கீதமாக நிறையும் நிலையில் அவர்கள் இருந்தனர். அவள் குரல் அந்த மதுர சங்கீதத்தின் அலைகளாக அவன் செவிகளில் பெருகியது. ‘‘அந்தப் பத்திரிகையிலே நம்ம படம் போட்டிருக்கான் பார்த்தீர்களா?’’ ‘‘வந்தது! படத்திலே என்னா இருக்கு?’’ ‘‘நேரதான் எல்லாம் இருக்கா?’’ ‘‘சந்தேகமில்லாம....’’ அவன் பிடி அவளைச் சுற்றி இறுகியது. ‘‘தோட்டத்தில் போய் புல் தரையிலே உட்கார்ந்து பேசுவமே?’’ என்று மெதுவாக அவன் காதருகே வந்து முணுமுணுத்தாள். திடீரென்று கோபால் அங்கே வந்து விடுவானென்று அவள் பயப்படுவதாகத் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் அவள் கூறியதற்கு இணங்கி அவளோடு தோட்டத்திற்குச் சென்றான் அவன். |