யால் பையனுக்கு ஜாடை காண்பித்தான் முத்துக்குமரன். பையன் உடனே டிரேயோடு கிளாஸ்களையும் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு போனான். அவள் பிரியத்தோடு அவனைக் கேட்டாள்: ‘‘ஏன் இந்தக் கெட்டப் பழக்கம்? அளவுக்கு மீறினா உடம்பு கெட்டுப் போயிடுமே?’’ ‘‘ஓகோ! நீ ரொம்ப ரொம்ப நல்ல பழக்கங்கள்ளாம் உள்ளவ. அதனாலே எங்கிட்ட என்னென்ன கெட்ட பழக்கம்லாம் இருக்குன்னு நீ கண்டுபிடிச்சுச் சொல்ல வேண்டியது தான்.’’ ‘‘அப்பிடி நான் சொல்ல வரலே, நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன்னே நீங்க சொன்னாலும் நீங்க எனக்கு நல்லவர்தான்.’’ அவன் கிண்டலாக ஒரு வாக்கியம் சொன்னான்; ‘‘காக்காய் பிடிக்கவும் உனக்குத் தெரிஞ்சிருக்கே...?’’ ‘‘விடலாமா பின்னே? உங்க தயவை நான் எப்படியும் அடைஞ்சாகணும்-’’ ‘‘வாயரட்டையிலே ஒண்ணும் கொறைச்சல் இல்லே?’’ ‘‘இவ்வளவு பயப்படறப்பவே - உங்ககிட்டக் காலந்தள்ளுறது சிரமமாயிருக்கு! வாயரட்டைன்னு வேற சொல்றீங்களே?’’ இவ்வளவு நேரத்திற்குப்பின் ஒருவருக்கொருவர் தாக்குதல் இன்றி சுபாவமாகப் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாகவே அவனிடம் கேட்டாள் அவள். ‘‘மலேயா போறதுக்கான பாஸ்போர்ட் அப்ளிகேஷன்ல எல்லாம் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டிங்களா?’’ |