‘‘கோபிச்சுக்காதே. சும்மா உன் வாயைக் கிளறிப் பார்த்தேன் -’’ முத்துக்குமரன் அவள் முகத்தையும் உயிர்க்களை திகழும் அந்த வனப்பு நிறைந்த விழிகளையுமே இமையாமல் பார்த்தான். அவற்றில் அவள் சத்தியமாகத் தனக்கு அர்ப்பணமாகியிருக்கிறாள் என்ற உணர்வின் சாயலை அவன் கண்டு கொள்ள முடிந்தது. அந்தச் சத்தியமான உணர்வைக் கண்டுபிடித்த பெருமிதத்தோடு அவள் வீட்டில் விருந்துண்ண அமர்ந்தான் அவன். 15 இன்னும் மூன்று நாள், இன்னும் இரண்டு நாள் என்று எண்ணி எண்ணிக் கடைசியில் பிரயாண தினமே வந்து விட்டது. பகல் ஒரு மணிக்கு விமானம். சிங்கப்பூர் போகிற ஏர் இந்தியா போயிங்கில் பயணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. முதலில் பினாங்கில்தான் நாடகங்களை நடத்தப்பட வேண்டுமென்று அப்துல்லா கண்டிப்பாகச் சொல்லியிருந்ததனால் சிங்கப்பூரில் இறங்கியதும் உடனே வேறு விமானத்தில் மாறி அவர்கள் மூவரும் பினாங்கு போக வேண்டும். அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் செல்வதற்காக அப்துல்லா சிங்கப்பூர் விமான நிலையத்திற்கே வந்திருப்பார். பிரயாண தினத்தன்று கோபால் மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான். மாதவியிடமும், முத்துக்குமரனிடமும் கூட முகத்தைத் தூக்கிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பழகினான். பங்களாவில் வருவோரும், போவோருமாக ஒரே கூட்டம். போர்டிகோவிலும், தோட்டத்திலும் இடம் போதாமல் - தெருவிலும் ‘பார்க்’ செய்யப்பட்டிருக்கும் அளவுக்குச் சிறிதும் பெரிதுமாக ஏராளமான கார்கள் ‘போக் ரோடே’ நிறைந்து காணப்பட்டன. |