‘ஜில் ஜில்’லும், வேறு பத்திரிகைக்காரர்களும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிய வண்ணமிருந்தனர். தேடி வந்திருக்கும் யாரையும் தன் கவனத்திலிருந்து தவறவிட்டு விடாமல் எல்லாரிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் கோபால். பெரிய பெரிய மாலைகளை படத் தயாரிப்பாளர்களும், சக நடிகர்களும், நண்பர்களும் கொண்டு வந்து போட்ட வண்ணமாயிருந்தனர். ஹால் முழுவதும் தரையில் ரோஜா இதழ்கள் நெற்களத்தில் நெல்லைப்போல சிதறியிருந்தன. ‘பொக்கே’கள் ஒரு மூலையில் மலையைப் போல் குவிந்து விட்டன. பதினொன்றே முக்காலுக்கு விமான நிலையத்திற்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தது. விமான நிலையத்திற்குப் புறப்படும்போது கோபாலுடன் அதே காரில் சக நடிகர்களும் பட முதலாளிகளும் சேர்ந்து கொண்டதால் முத்துக்குமரனும் மாதவியும் வேறொரு காரில் தனியே சென்றனர். மீனம்பாக்கத்திலும் பலர் மாலையணிவிக்க வந்திருந்தனர். கூட்டமும் நிறைய இருந்தது. முத்துக்குமரனுக்கு அது முதல் விமானப் பயணம். அதனால் பயணத்தைப் பற்றிய குறுகுறுப்பு மனத்தில் இருந்தது. வழியனுப்புகிறவர்களின் கூட்டம் கோபாலை மொய்த்துக் கொண்டிருந்தது. வழியனுப்ப வந்திருந்தவர்களில் பலரை மாதவி அறிந்திருந்தாலும் அவர்களோடு பேசுவதற்காகவும் சொல்லி விடை பெறுவதற்காகவும் கோபாலருகிலே போய் நின்றால் முத்துக்குமரன் தனியே விடப்படுவான் என்பதை உணர்ந்து அவனருகிலேயே இருந்தாள் அவள். நடுநடுவே கோபால் தன் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஏதேதோ கேட்டபோதும்கூட அதற்குப் பதில் சொல்லிவிட்டு மறுபடி முத்துக்குமரனின் அருகிலேயே வந்து நின்று கொண்டாள் அவள். |