| பினாங்கைப் பொறுத்த வரை முதல் ரெண்டு நாடகத்துக்கும் புக்கிங் இப்பவே ஹவுஸ் ஃபுல் ஆயிடிச்சி...’’ ‘‘மத்த ஊர் ‘ஏற்பாடெல்லாம் எப்பிடியோ?’’ ‘‘கோலாலும்பூர், ஈப்போ, மலாக்கா, சிங்கப்பூர், எல்லாமே புரோகிராம் ரொம்ப நல்லா இருக்கும். எல்லா ஊர்லேயும் உங்க ஃபேன்ஸ் நிறைய இருக்காங்க...’’ கோபால் இன்னொரு கிளாஸ் காக்டெயிலையும் உள்ளே தள்ளினான். அப்துல்லா வேலைக்காரனைக் கூப்பிட்டு மாதவியும் முத்துக்குமரனும் எங்கே போனார்கள் என்பதைப் பற்றி விசாரித்தார். பினாங்கு ஹில்லின்மேல் அப்துல்லாவின் பங்களாவிற்கு அருகே ஒரு பார்க் இருக்கிறது. மாதவியும் முத்துக்குமரனும் அந்தப் பார்க்குக்குப் போயிருக்கலாம் என்று வேலைக்காரனை விசாரித்ததில் தெரிந்தது. கொஞ்சம் அதிகமாகவே சோர்ந்து போனதன் காரணமாக கோபால் தள்ளாடித் தள்ளாடி நடந்து தன் அறையில் போய்ப் படுக்கையில் விழுந்துவிட்டான். அப்துல்லா நைட்கவுன் அணிந்து ‘பைப்’ எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு வாயிற்படியருகே உட்புறமாக சோபாவைப் போடச் செய்து அமர்ந்து கொண்டார். ‘பைப்’ புகை வளையம் வளையமாக மேலெழும்பி சோபாவுக்கு மேலே புகைக் கோபுரமொன்றைச் சமைப்பதும் அழிப்பதுமாக க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக் கொண்டிருந்தது. அவருடைய மனத்தில் மாதவியைப் பற்றிய நினைவுகளின் சுகமும் கிறக்கமும் தணியவில்லை, பினாங்கு ஊருக்குள் இருந்த பங்களாவில் தம்முடைய குடும்பத்தினர் எல்லாரும் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில்தான் - ஹில் பங்களாவுக்குத் தங்க வந்திருந்தார் அவர். அப்படி இருந்தும் மாதவியை வசப்படுத்த முடியாதது வேதனையை |